Saturday 13 March 2021

காலபைரவாஷ்டகம் (தமிழில்)

ஸ்ரீ காலபைரவாஷ்டகம் எனும் ஸ்ரீ பைரவர் போற்றி அஷ்டகமானது ஸ்ரீகுரு ஆதிசங்கரர் பெருமானால் இயற்றப்பட்ட பெருமைமிக்கதாகும். இப்பாடல் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றுள்ளது. அதனை அப்படியே பாடிடும் பொழுது மிகுந்த பலனைத் தரும். குருமார்கள் இயற்றிய ஸ்லோகங்களை அப்படியே பின்பற்றி நடப்பதே சாலச் சிறந்தது என்றாலும், அடியேன் நாமம்,  சிவ ஸ்ரீ குரு கோரக்கர் பெருமானின் திருவடி போற்றுகின்ற அடியார் கூட்டத்தாருள் ஒருவனாம் க.அன்பழகனாகிய எனக்கு ஒரு ஆழ்மன பேராசையின் வெளிப்பாடாக, நீண்ட நாள் எண்ணம் இன்று, 14/03/2021, ஞாயிறு அன்று காலை, ஸ்ரீகாலபைரவாஷ்டகத்திற்கு அதே தொனியில், தமிழில், யாவரும் படித்து, பாராயணம் செய்து பலன் பெற்றிட வேண்டும் என்ற பெரும் ஆசையின் காரணமாக, முதன்முதலில், நமது ஸ்ரீபாப்பையா சித்தர் பெருமானின் இணைய பக்கமான நமது தளத்தில் வெளியீடு செய்வதில், எனது பிறவியின் பயன்களில் ஒன்றை அடைவதாக அகமகிழ்கின்றேன். சிறு தவறுகள் இருப்பினும், அடியார்கள் அருட்கூர்ந்து, பொறுமையுடன் தெரிவிக்கலாம். திருத்திக்கொள்ள பணிவுடன் காத்திருக்கிறேன்.


ஓம் நமசிவய !

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

பாடும் முறை: 

(தான தான தான தான தான தான தானனா

தான தான தான தான தான தான தானனா

தான தான தான தான தான தான தானனா

தான தான தான தான தான தான தானனா)


இந்திரன் பணிந்திடும் தாமரை பூந்திருவடி

சந்திரனும் நாகமும் சூடிடும் ஜடாமுடி

நாரதரும் சாதகரும் போற்றும் கருணா மூர்த்தி

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            1


முக்திதரும் முதல்வனாம் ப்ரகாச கோடி சூரியன்

சக்திதரும் நீலகண்ட கால கால முக்கண்ணன்

தூயத்தாமரை கண்களாம் சொக்கட்டானில் சூரனாம்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            2


சூல மழு பாச தண்ட பாணி முதல் காரணன்

மூல முதற்கடவுளன் அழிவிலா கரிய மேனியன்

பிணியிலா பெருமையன் முக்திசெல்வ தாண்டவப்பிரியன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            3


போகம் மோட்சம் அளிப்பவன் பிரசித்தி வடிவ அழகினன்

ஆகப் பெரும் அன்பு காட்டும் காவல் தெய்வம் ரட்சகன்

சலங்கை ஒலி இடையினன் அனைத்து உலக வடிவினன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            4


தர்மசேது காவலன் தீமை மார்க்க நாசகன்

கர்ம மாய மலங்கள் நீக்கி நற்சுகம் அளிப்பவன்

பொன் ஒளி சடையினன் உலகாளும் திருமேனியன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            5


ரத்ன பாதுகை சூடும் அழகொளி திருவடிவினன்

நித்யனாம் நிரஞ்சனாம் தூய்மை இஷ்ட தெய்வனன்

கூர்மை பற்கள் கொண்டவன் பாவ சத்ரு விநாசகன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            6


அட்டகாச ஒலியினன் பத்மண்டகோச அழிவினன்

சட்டநாதன் விழிகளால் பாவகுவியல் எரிப்பவன்

அஷ்ட சித்தி அருள்பவன் கபாலமாலை கழுத்தினன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            7


பூதங்களின் நாயகன் விசால கீர்த்தி தாயகன்

 காசிபதி மாந்தர் புண்ணிய பாவ பரிசோதகன்

அனைத்து உலக கர்த்தனாம் ஆதியன் நிறை நீதியன்

காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் !                            8


காலபைரவாஷ்டகம் மனிதவாழ்வில் குதூகலம்

ஞானம் முக்தி சாதனம் வழங்குமே உயர் புண்ணியம்

சோகம் மோகம் கோபம் லோபம் தாபம் பொடிபடும்

காலபைரவ மூர்த்தி திருவடியருளும் கிட்டுமே!                                    9

Wednesday 16 December 2020

அறக்கட்டளை நிர்வாக கூட்டம்

அன்பர்களுக்கு வணக்கம் ! கடந்த 15/12/2020 அன்று செவ்வாய்க்கிழமை நமது நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ புனிதாதேவி இன்பராஜன் மற்றும் மடாதிபதி ஸ்ரீ தமிழினியன் சுவாமிகள் முன்னிலையில் நிர்வாக அறங்காவலர் உறுப்பினர்கள் திரு வெங்கடேஷ், குமாரி ரஞ்சிதா மற்றும் பக்தர்கள் திரு. திருமால், திரு.உலகநாதன், திரு ஹரி கிருஷ்ணன்,  திரு.சிவானந்தம், திரு.க.அன்பழகன், திருமதி.கலைச்செல்வி, திருமதி.முத்துலெட்சுமி, திருமதி.சோனா மற்றும் அர்ச்சகர் திரு கிருஷ்ணன், திரு. கணேஷ் மற்றும் இதர பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் அறக்கட்டளை எதிர்காலம் குறித்தும் மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி படத்தில் வருகின்ற 25/01/2020, திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ பாப்பையா சுவாமியின் குருபூஜை நடத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஆலய சீரமைப்பு, பந்தல் போடுதல், ஒலி ஒளி அமைப்பு, அன்னதானம், துறவிகளுக்கான வஸ்திர தானம், சித்தர் வழி வேள்வி நடத்துதல், அன்னதான கூடத்தின் இருக்கைகள் புதிதாக மாற்றுதல், கழிப்பிட, குளியல், துறவி குடில் அறைகள் புதுப்பித்தல்,  பீடத்தை சுற்றியுள்ள முள்வேலி சீரமைத்தல் ஆகியன விவாதிக்கப்பட்டது. மேலும், மகானின் குருபூஜை குறித்த பத்திரிகைகள்,போஸ்டர்கள் அச்சடித்தல் மற்றும் அதனை விநியோகித்தல் தொடர்பாக பேசப்பட்டது. குருபூஜை விழாவிற்கு உபயதாரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. மற்றும், முக்கியஸ்தர்கள் வரிசையில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஒன்றிய தலைவர் மற்றும் இதர முக்கிய அதிகாரிகளை அழைப்பது  தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்ணுறும் அன்பர்கள், பக்தர்கள் மகாகுருவின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள தயாராகும்படி மிகவும் அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
ஆலய நிர்வாகம்.

Tuesday 8 August 2017

ஓம் நமசிவாய!

அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வையகம், வாழ்க யாவரும் நலமுடன்! எல்லாம் வல்ல எம் முழுமுதற்கடவுளாம் கணபதியை பணிந்து, எம் குலதெய்வமாம் ஞான சாஸ்தாவாம் அருள்மிகு குட்டியாண்டவரின் பொற்பாதங்கள் சரணடைந்து, எல்லாம் வல்ல என் அப்பன், எம் இஷ்ட தெய்வமாம் கந்தகோட்டத்துள் வாழ் அருள்மிகு செல்வமுத்துகுமாரசாமியாய் விளங்கும் கந்தபெருமானின் நிறைந்த அருளோடும், கருணைக்கடலாய் திருவாரூரின் கண் மடப்புரத்தே அருளாட்சி கடாட்சித்து காத்திடும் அடிமுடி காண இயலா, எம்பெருமானாகிய திரு அண்ணாமலையாரின் அவதாரமாக விளங்கும் எம் குருதெய்வம் அருள்மிகு குரு தெட்சிணாமூர்த்தியின் கடைக்கண் அருளால் உயிர்வாழும் இவன் பெயர் அன்பழகன் என்பதாகி, நவநாத சித்தர்களுள் மூன்றாமிடத்தும், பதினென்சித்தர்பெருமக்களுள் முக்கியமானவருமாகிய கருணைபொழியும் அருள்வள்ளல், பாமரரையும், எளியவரையும், பாவிகளையும், வாழ்க்கை பாதிப்புகளால் நிம்மதியிழந்த எவரையும் தம் கருணை உள்ளத்தின் ஊற்றாகிய அன்பினாலும், அருளாலும், காத்திடும், எம் ஐயன் அருள்மிகு கோரக்கர் பெருமான் அவர்களின் சீடராய் விளங்கிய, முற்பிறவியில், பௌத்தமத துறவி, அருள்மிகு சானாஷ்ட புத்தராய் விளங்கி, பின்னர், இசுலாமிய மதம் சார்ந்த அருள்மிகு பாப்பையா சித்தராய் உருவெடுத்து, நாகப்பட்டிணம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகில் ஜீவசமாதி கொண்டு அருளாட்சி செய்திடும் எம் மகாகுரு அருள்மிகு பாப்பையா சித்தர் அவர்கள் சார்ந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த வலை இதழை துவக்கியுள்ளேன். இதைக் கண்ணுறும் அன்பர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை எமக்கு தந்துதவி, அஃது, வரும் காலங்களில் மற்ற அன்பர்களுக்கும் உதவிட துணைபுரிய வேண்டுகிறேன்.

ஓம் நமசிவாய!

குருவருளை வழங்கும் பாடல்

ஸ்ரீ பாப்பையா சுவாமிகளின் திருவருளையும் குருவருளையும் பெற விரும்பும் அன்பர்கள் ஸ்ரீ பாப்பையா சுவாமிகளின்  அருளால் வெளிக்கொண ரப்பட்ட கீழ்க்காணும்  பாடலை தங்களுக்கு தெரிந்த மெட்டில் பாடி நல்லருள் பெற்றிட வேண்டுகிறேன். மகானை முழுதும் சரணடைந்து, இப்பாடலைப்  பாடி  மனமுருகி வேண்டுவோர்களின் குறைகள் விரைவில் நிவர்த்தியாகும். மகான் ஒரு வரப்பிரசாதி என்பதை நிச்சயம் உணரலாம். நீங்கள் விரும்பினால் உங்களால் இயன்ற பொருளுதவியை அன்னதான பணிகளுக்காய் தந்துதவலாம். 
ஓம் குருவே சரணம்!

Saturday 25 February 2017

நன்கொடை

அன்பர்களே!  வணக்கம்.  நலமுடன் வாழ்க !

நமது ஸ்ரீ  பாப்பையா  சித்தர் ஜீவசமாதி பீடமானது, மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தர் அறக்கட்டளை நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.

நமது ஜீவசமாதி பீடத்தில் அமாவாசை தோறும் நீத்தார் நினைவை போற்றும் வகையில் ஆத்ம பீடத்தில் வழிபாடு செய்து அன்னதானம்  நடத்திடவும், பௌர்ணமி தோறும் ஸ்ரீ மகேஸ்வர பூஜை செய்து அன்னதானம் செய்வதால் மகான் ஸ்ரீ பாப்பையா சித்தர் குருவருளும் அதனால் நவநாத சித்தர்கள் மற்றும் பதினெண்சித்தர்களில் ஸ்ரீ பதஞ்சலி, ஸ்ரீ அகத்தியர்பெருமானின்   குருவருளும் அதனால் எல்லாம்வல்ல ஸ்ரீ சிவசக்தியின் திருவருளும் பெற்று குறிப்பாக சித்தர்களின் தலைவராம் எம்பெருமான் ஸ்ரீ கோரக்கரின் கருணைமிகு பெரும் அருளும் பெற்று கர்ம வினைகளை போக்கிக் கொள்ளவும்  விஜயம்  செய்யுங்கள்.

நல்ல இதயம் கொண்ட, ஆன்மிக நாட்டம் கொண்ட, சித்தமார்க்கத்தில் ஆத்மார்த்தமான அன்புகொண்ட அன்பர்களே! ஸ்ரீ மகாகுரு பாப்பையா சித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பௌத்தபூரணி பவதாரிணியாய் விளங்கும் ஸ்ரீ சொர்ணமகாகாளி   எழுந்தருளியுள்ள ஆலய விமானம் கட்டுவித்து கும்பாபிஷேகம் செய்திட திட்டம் உள்ளபடியாலும், அன்னதானம் தடையின்றி நடத்திடவும்  பக்தர்களின் பேராதரவு வேண்டியுள்ளதால்  நன்கொடையளிக்கும் நல்ல உள்ளங்கள் ஜீவசமாதி பீடத்தின் அறங்காவலர் ஸ்ரீ புனிதாதேவி இன்பராஜன் அவர்களையோ, நேரடியாக பீடத்திற்கு வருகைபுரிவோர்  அலுவலக மேலாளரையோ  அணுகிட வேண்டுமாய் வேண்டுகிறோம். அவ்வாறு அன்னதானம் உள்ளிட்ட பூஜைகளுக்கு நன்கொடை வழங்குவோர் உரிய ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்பு எண்: 9791486411 / 9626546885 / 9942544916

* அறக்கட்டளை வங்கி கணக்கு எண்

Account Name: MAHAGURU SRI PAPPAIYA SIDDHAR CHARITABLE TRUST

Account Number: 283001000012574

Bank Name: INDIAN OVERSEAS BANK          IFSC: IOBA0002830

Branch: PORAIYAR

(குறிப்பு): 
  • நன்கொடையை  ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு முன்னராக அறங்காவலரை தொடர்புகொண்டு பின்னர் செலுத்தலாம். உரிய ரசீதை நேரடியாகவோ/ தபால் வழியாகவோ  பெற்றுக்கொள்ளலாம்.
  • ஜீவசமாதி பீடத்தின் பூஜைகள், குருபூஜை, பெளர்ணமி அன்னதானம் மற்றும் இதர பூஜைகள் பற்றிய அறிவிப்பு உங்களை வந்தடைய நீங்கள் விரும்பினால் பீடத்தின் இ-மெயில் முகவரிக்கு, I am interested to receive Notifications by SMS / e-Mail / Phone / Post என டைப்  செய்து,உங்களின் பெயர், முகவரி, மொபைல் எண், வாட்ஸ்-அப் எண் ஆகியவற்றை தெரிவித்தால் பீடத்தின் தகவல் குறிப்பில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, ஐயனின் அருளை உரிய நேரத்தில் நீங்கள் பெற்றிட உதவும் என்பதை அறியவும். எமது இ-மெயில் முகவரி: mahagurusripappaiya2020@gmail.com

ஓம் நமசிவய!

மகா சிவராத்திரி-2017

24/02/2017, வெள்ளிக்கிழமை ஸ்ரீ பாப்பையா சித்தர் பீடத்தில் உபாசகர் திரு.இன்பராஜன் தலைமையில் மகா சிவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நான்கு காலப் பூஜைகளும் குறித்த நேரத்தில் இறையருளுடன், இறையன்பர்களுடன் நடத்தப்பட்டது.